சாராயம், கஞ்சா விற்பனையை தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்
ராமாலை பகுதியில் அதிக அளவில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
குடியாத்தம்
ராமாலை பகுதியில் அதிக அளவில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் இமகிரிபாபு, மனோகரன், சரவணன் உள்ளிட்டோர் பேசுகையில் கிராமப்புற பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி சரிவர நடைபெறவில்லை. அவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு உரிய தகவல் தெரிவிப்பது இல்லை. கிராமப் பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
புறக்காவல் நிலையம்
சுரேஷ் குமார்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி ரூ.90 லட்சம், ரூ.80 லட்சம் என ஒதுக்கப்படுகிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கும் தொகையை ஒன்றியக் குழு உறுப்பினர் பரிந்துரைக்கும் பணிகளுக்கும் ஒதுக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகளுக்கு மாவட்ட கலெக்டரிடம் கேட்டு அதிக நிதி பெற வேண்டும்.
வெங்கடேசன்: ராமாலை பகுதிகளில் சாராயம், கஞ்சா உள்ளிட்டவை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க ராமாலை பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
ராஜேஸ்வரி பிரதீஷ்: மேல் ஆலத்தூர் ெரயில்வே பாலத்தின் கீழே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக மின்சார மோட்டார்கள் அமைத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இமகிரிபாபு: வனத்துறையினர் குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிடிக்கப்படும் பாம்புகளை கொண்ட சமுத்திரம் ஊராட்சி எல்லையில் உள்ள வனத்துறை பகுதியிலேயே விட்டுவிடுகின்றனர். அந்தப் பாம்புகள் மீண்டும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து விடுகின்றன. எனவே பாம்புகளை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.
உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், உறுப்பினர்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டங்களில் வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட சில துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதில்லை. அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து வரும் கூட்டங்களில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.