பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து மூதாட்டி பலி


பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து மூதாட்டி பலி
x

திருச்சி அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து மூதாட்டி பலியானார்.

திருச்சி

திருவெறும்பூர்,ஜூலை.24-

திருச்சி அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து மூதாட்டி பலியானார்.

பாதாள சாக்கடை பணிகள்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 40-வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி அருகே திருவெறும்பூர் பகவதிபுரத்தில் 25 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு, அங்கு வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகின்றனர்.

மூதாட்டி பலி

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சாகர் பானு (வயது 65) என்பவர் நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு நடந்து சென்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறி குழிக்குள் விழுந்தார். சமீபத்தில் பெய்த மழையால் அங்கு சுமார் 10 அடி அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த தண்ணீருக்குள் சாகர்பானு தத்தளித்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் அதை யாரும் கவனிக்கவில்லை. இதில் அவர் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து சாகர் பானுவின் உடல் தண்ணீரில் மிதந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சாகர்பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அமைச்சர் ஆறுதல்

இதை அறிந்த திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனைக்கு நேரில் சென்று சாகர்பானுவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து மாவட்ட கலெக்டர் மூலம் தகுந்த நிதி பெற்று தரப்படும் என்றும், இனி இதுபோல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு இன்னும் ஒரு மாதத்தில் இப்பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


Next Story