கண்மாயில் மீன்பிடிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி சாவு
கோவில்பட்டியில் கண்மாயில் மீன்பிடிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி வேலாயுதபுரம் கண்மாயில் மீன்பிடிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
மீன்பிடிக்க சென்றார்
கோவில்பட்டி வேலாயுதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மூக்கையா மகன் அந்தோணி (வயது 75). இவரது மனைவி பூச்சியம்மாள். தம்பதியருக்கு குழந்தைகள் கிடையாது. வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் தினமும் வேலாயுதபுரம் கண்மாய்க்கு சென்று மீன்பிடித்து வந்து, அவற்றை விற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலையில் அந்தோணி வேலாயுதபுரம் கண்மாயில் மீன் பிடிக்க சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை.
கண்மாயில் சாவு
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த கண்மாய்க்கு சில சிறுவர்கள் மீன்படிக்க ெசன்றனர். அப்போது கண்மாயில் அவர் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் அந்த கண்மாய்க்கு சென்று, அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மீன்பிடிக்க சென்ற அவர் கண்மாயில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பதாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.