கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 10 மணியளவில் முதியவர் ஒருவர் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக படிக்கட்டுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த அவர் திடீரென தான் பையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் அங்கு பணிக்கு வந்து கொண்டிருந்த ஊழியர்கள் அவரது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரை ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றனர்.
திருமணம் செய்ய எதிர்ப்பு
விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகே உள்ள தூளிபட்டியை சேர்ந்த காளியப்பன் (வயது 65) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது மகனுக்கு ஊர் பொது கோவிலில் திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் பொது கோவிலில் திருமணம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் காளியப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
மிரட்டல்
இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் காளியப்பனை தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த காளியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து காளியப்பன் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.