சென்னை தலைமைச்செயலகம் அருகே தீக்குளித்த முதியவரால் பரபரப்பு
சென்னை தலைமைச்செயலகம் அருகே தீக்குளித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் நேற்று முதியவர் ஒருவர் திடீரென மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து வந்து முதியவர் உடலின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு முதியவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 60 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீக்குளித்த முதியவர் திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு நிர்மலா நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 72) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்ததில், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான ஒருவருக்கு ரூ.14 லட்சம் கடனாக கொடுத்ததாகவும், அதை அவர் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும், அதை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது குறித்த மனு இருந்தது தெரியவந்தது. இதனால் கொடுத்த கடனை திருப்பி வாங்கி கொடுக்க வேண்டும் என கூறி சென்னை தலைமை செயலகம் அருகே தீக்குளித்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.