தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த வயதான தம்பதி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த வயதான தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் குரும்பபட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 75). அவருடைய மனைவி மீனாட்சி (68). நேற்று இவர்கள் 2 பேரும், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தின் நுழைவுவாயிலில் நின்ற போலீசார், தம்பதி கொண்டு வந்த பையை சோதனையிட்டனர். அப்போது வயதான தம்பதி, ஒரு பாட்டிலில் மண்எண்ணெயை கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து தம்பதியிடம், போலீசார் விசாரணை நடத்தினர். உடனே வயதான தம்பதி கதறி அழுதபடி கூறியதாவது:-
நாங்கள் பழனி அடிவாரம் பகுதியில் 25 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறோம். மேலும் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுடைய இட்லி கடையை காலிசெய்யும்படி சிலர் மிரட்டுகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து விடும் நிலையில் இருக்கிறோம். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் தீக்குளிக்க மண்எண்ணெயை கொண்டு வந்தோம், என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதையடுத்து வயதான தம்பதியை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் புகார் மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.