குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி


குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி
x

குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் கொட்டும் மழையில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை, 36-வது வார்டு புருஷோத்தமன் நகர், 2-வது சாலை பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரை முழுவதும் வெளியேற்றாமல் கொட்டும் மழையிலும் கான்கிரீட் கலவை கொட்டி தரமற்ற முறையில் பணிகள் செய்து வருவதாக பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி தரமற்ற முறையில் நடந்த பணியை நிறுத்தினர். மேலும், பணியில் அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி இளநிலை பொறியாளர் வெங்கடேசன் என்பவரை பணியிடை நீக்கம் செய்தனர். மேலும், தரமற்ற பணியை செய்த ஒப்பந்ததாரர் மீது கருப்பு பட்டியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறுகையில்,

தாம்பரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து மண்டலத்திலும் உள்ள அதிகாரிகளுக்கு மழை நேரங்களில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டி பணிகள் செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதை மீறி கொட்டும் மழையிலேயே பள்ளத்தில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் வடி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால், பணியில் கவனக்குறைவாக இருந்ததன் காரணமாக இளநிலை பொறியாளர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில்

தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. 5 மண்டல அலுவலகங்கள் உள்ளது. இந்த நிலையில் தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், போதுமான அளவில் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.

14 வார்டுகளுக்கு ஒரு இளநிலை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிகாரிகள் பற்றாக்குறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில ஒப்பந்ததாரர்கள் தரமற்ற பணிகளை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள முக்கிய பகுதியான புருஷோத்தமன் நகர் பகுதியிலேயே இதுபோன்று தரமற்ற பணிகள் நடக்கும் நிலையில், பல இடங்களில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் அலட்சியமான முறையில் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் மாநகராட்சியில் இது தொடராமல் இருக்க போதுமான அலுவலர்களை உடனடியாக நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story