கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.
சென்னை,
பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீமதியின் பெற்றோரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கிட வலியுறுத்தி தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பால கிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13.07.2022 அன்று மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார் என்கிற செய்தி அனைவரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது இயற்கையான மரணம் இல்லை என்பதாலும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாலும் இது குறித்து காவல்துறை தீர விசாரிக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் தொடர்ந்து கோரி வரும் நிலையில், மாணவியின் உறவினர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை காவல்துறை தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி தடுக்க முயற்சித்து வருகிறது. தமிழக அரசு இதை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. ஏற்கனவே அப்பள்ளியில் இது போன்று மாணவிகள் மரணடைந்துள்ளதும், தற்போது இந்த மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளதும் அங்குள்ள மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டதோடு, மாணவியின் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அத்துடன் உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் உடனடியாக கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.
மரணமடைந்த மாணவியின் பெற்றோர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நான் (கே.பால கிருஷ்ணன்) நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன். மகளை இழந்த நிலையில் அவர்கள் மிகவும் மனமுடைந்து உள்ளனர். மருத்துவமனையில் இருந்து கொண்டே, தங்களது மகளின் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என தாங்கள் தெரிவித்துள்ளதை அவர்களிடம் கூறினேன்.
இந்த தனியார் பள்ளி விடுதியில் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களையொட்டி சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்த வன்முறை சம்பவங்களில் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவானவர்கள் ஈடுபட்டார்களா என்பதையும் தமிழக அரசு விசாரிக்க வேண்டும். இந்த வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்கள் மீதும், மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் மீது வழக்கு தொடுப்பதால் அவர்களது எதிர்காலம் பாதிக்கும் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு மாணவர்கள் மீது வழக்கு தொடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்நிலையில், மாணவியின் மரணத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்தி மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட தாங்கள் உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பள்ளி மாணவிகளிடம் ஏற்கனவே நடந்துள்ள இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் தாங்கள் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கவும், பொது மக்களிடம் அமைதியை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.