தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த முன்னாள் ராணுவ வீரர்
தாந்தோணிமலையில் தண்ணீர் தொட்டியில் முன்னாள் ராணுவ வீரர்பிணமாக கிடந்தார்.
பிணமாக கிடந்த முன்னாள் ராணுவ வீரர்
கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன்நகர் பகுதிக்குட்பட்ட 4-வது கிராசை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 48). முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது தாளப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பபிதா என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கணவன்-மனைவிஇடையே கருத்து வேறு காரணமாக சில ஆண்டுகளாக ராமமூர்த்தி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டை ேசர்ந்த ஒருவர் ராமமூர்த்தியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. பின்னர் வீட்டின் பின்பகுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் ராமமூர்த்தி பிணமாக கிடந்தார்.
கொலையா?
இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ராமமூர்த்தி தண்ணீர் தொட்டியில் தெரியாமல் விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு சென்றனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.