கிண்டி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலி
கிண்டி அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
சென்னையை அடுத்த பரங்கிமலை-கிண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே பச்சையம்மன் ரெயில்வே கேட் இருந்தது. தற்போது இந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் அந்த பகுதியில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இந்தநிலையில் கிண்டி மடுவாங்கரையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான குமார் (வயது 43), நேற்று காலை அந்த பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமார், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முன்னதாக அவர் மீது மோதிய மின்சார ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டதால் அதன்பின்னால் தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.