வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு


வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு
x

சுரண்டை அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வயதான தம்பதி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஊர் மேலழகியான் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் குலசேகரன் (வயது 75). இவருடைய மனைவி ராமலட்சுமி (70). இவர்கள் சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டிற்குள் திடீரென மர்மநபர்கள் புகுந்து வயதான தம்பதியை இரும்பு குழாயால் தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் ராமலட்சுமியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

10 பவுன் நகை பறிப்பு

இதற்கிடையே முதியவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வயதான தம்பதியினர் படுகாயத்துடன் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பிறகு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், இன்ஸ்பெக்டர் வேல்கனி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story