ஒரே சேலையில் தூக்குப்போட்டு வயதான தம்பதி தற்கொலை
ஒரே சேலையில் தூக்குப்போட்டு வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 78). இவரது மனைவி பானுமதி (72). இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணமாகி குடும்பத்தினருடன் சேலம் மாவட்டம், உலிபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார். கவிதா பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூரில் சின்னசாமி என்பவருடன் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதனால் லாடபுரம் வீட்டில் தியாகராஜனும், பானுமதியும் வசித்து வந்தனர். மேலும் அவர்கள் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பானுமதி புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக கடந்த 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை விடிந்து வெகுநேரமாகியும் தியாகராஜ், பானுமதி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தியாகராஜன் வீட்டிற்கு சென்றனர்.
தூக்கில் தொங்கினர்
அப்போது வீட்டின் உள்ளே மின் விசிறி கொக்கியில் தியாகராஜனும், பானுமதியும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் தியாகராஜன், பானுமதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தியாகராஜனும், பானுமதியும் மிகவும் அன்புடனும், பாசத்துடனும் வாழ்ந்து வந்தனர். பானுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில் இருந்து தியாகராஜன் மிகவும் கவலையுடன் இருந்து வந்தார். மேலும் பானுமதி கடந்த 15 நாட்களாக புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நோயின் கொடுமையால்...
நோயின் கொடுமையை பானுமதியால் தாங்க முடியாததை கண்டு தியாகராஜன் வேதனை அடைந்தார். இதனால் அவர்கள் 2 பேரும் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.