கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி
x

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று நடந்தது. மதியம் கூட்டம் முடிவடையும் நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் 4 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் ஓடி வந்தனர். அதில் 2 ஆண்கள் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணெயை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அம்மாபாளையம் மெயின்ரோட்டை சேர்ந்த விவசாயி சுப்பையா (வயது 64) என்பதும், அவருடன் வந்தவர்கள் அவரது தம்பி, 2 தங்கைகள், அவரது மனைவி, தம்பி மனைவி என்பதும் தெரியவந்தது.

இவர்களது குடும்பத்தின் பாகப்பிரிவினை செய்யாத கூட்டு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரம் பதிவு செய்து நெருங்கிய உறவினர் ஒருவர் பட்டா செய்து, அதனை மற்றொரு நபருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டாக்களை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சுப்பையா புகார் கூறிய அவரது நெருங்கிய உறவினர், சுப்பையா கூறுவது முற்றிலும் பொய் என்றும், அவர் பணம் பறிக்கும் நோக்கில் சிலர் தூண்டுதலின் பேரில் இந்த குற்றச்சாட்டை தெரிவிக்கிறார், என்றார். மேலும் சுப்பையா, அவரது தம்பி ஆகியோரின் குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர் புகார் கொடுத்துள்ளார்.


Next Story