கள்ளக்காதலனை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி
குஜிலியம்பாறை அருகே தன்னிடம் வாங்கிய பணம், நகையை திருப்பி கொடுக்க மறுத்த கள்ளக்காதலனை, பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டருடன் கள்ளக்காதல்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). பெயிண்டர். இவருக்கு சின்னக்கண்ணு என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் மகேஸ்வரி (36). கூலித்தொழிலாளி.
இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். முத்துக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது.
இந்தநிலையில் அவ்வப்போது மகேஸ்வரியிடம் இருந்து முத்துக்குமார் பணம், நகையை பெற்று வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தையும், நகையையும் மகேஸ்வரி திருப்பி கேட்டார். ஆனால் அவர் திருப்பி கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
எரித்து கொல்ல முயற்சி
கடந்த 28-ந்தேதி இரவு குஜிலியம்பாறை அருகே சி.அம்மாபட்டியில் இருந்து தவசிபட்டி செல்லும் காட்டுப்பகுதியில் 2 பேரும் தனிமையில் இருந்தனர். அப்போது திடீரென தான், கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முத்துக்குமார் மீது ஊற்றி மகேஸ்வரி தீ வைத்தார். இதில் முத்துக்குமாரின் இடுப்பு பகுதிக்கு கீழே தீப்பிடித்து எரிந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு மகேஸ்வரி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதற்கிடையே தீக்காயத்துடன் தனது வீட்டுக்கு முத்துக்குமார் வந்தார். அவரை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்தனர். பணம், நகையை கொடுக்க மறுத்த கள்ளக்காதலனை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.