நெய்தவாயல் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும்; பக்தர்கள் கோரிக்கை


நெய்தவாயல் கிராமத்தில் பழமை வாய்ந்த கோவிலை புனரமைக்க வேண்டும்; பக்தர்கள் கோரிக்கை
x

நெய்தவாயல் கிராமத்தில் பழமை வாய்ந்த சுந்தரராஜ பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

பழமை வாய்ந்த கோவில்

மீஞ்சூர் அருகே நெய்தவாயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முற்கால சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ள 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளம் உள்ளது. அதன் அருகே அந்த காலத்தில் வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் சுமை தாங்கி கற்கலால் சத்திரத்தை அமைத்து பக்கத்தில் வரலாறு புகழ்மிக்க ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலை கட்டினர். பின்னர் அந்த கோவிலை ராஜேந்திர சோழன், சாளுக்கிய, காகாதியர்கள், விஜயநகர மன்னர்கள் புனரமைப்பு பணி செய்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த இந்த கோவில் மூலவர் கோபுரம் 3 நிலைகளைக் கொண்டதாக விளங்குகிறது.

சீரமைக்க கோரிக்கை

இந்த கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகள் மற்றும் இதரப் பகுதிகள் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் கோவில் கதவு சேதமடைந்த நிலையில் மதில் சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளது. இந்த கோவில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோவில் உள்ளே அழகிய வேலைபாடுகளால் வடிவமைக்கப்பட்ட பீடத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த சன்னிதியில் வடக்கு பகுதியில் கேசவ பெருமாள் மற்றும் வெளி பிரகாரத்தில் உள்ள சிலைகளின் பீடங்களில் பெயர்ந்து காணப்படுகிறது.

எனவே பழமையான நெய்தவாயல் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோவிலின் கோபுரங்கள் மற்றும் மதில் சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story