இளையான்குடியில் கூடுதல் இ-சேவை மையம் திறக்க வேண்டும்
இளையான்குடியில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் போதிய ஆட்கள் இல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் கூடுதல் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இளையான்குடி,
இளையான்குடியில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் போதிய ஆட்கள் இல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதியில் கூடுதல் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை
இளையான்குடி யூனியனில் 55-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்தில் ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இளையான்குடி பகுதியில் ஒரே ஒரு ஆதார் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தினந்தோறும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் வந்து தங்களது ஆதார் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ஆதார் கார்டு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த இ சேவை மையத்தில் பொதுவாக 2 பணியாளர்கள் பணியில் இருந்து வந்தனர். தற்போது ஒரு பணியாளர் மட்டுமே பணிகளை மேற்கொண்டு வருவதால் பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களுக்கு கூடுதல் காலதாமதம் ஏற்பட்டு பணிகள் நடைபெறாமல் 2 அல்லது 3 நாட்கள் வரை அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
பலமுறை அலைய வேண்டிய நிலை
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவரும், சமூக நல ஆர்வலருமான ராவுத்தர் நெய்னார் கூறியதாவது:- இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் இ சேவை மையத்தில் போதிய ஆட்கள் இல்லாமல் தற்போது 2 நபர்கள் மட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஒரே பெண் பணியாளர் மட்டுமே பணியில் உள்ளதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் தங்களது தேவைக்காக இங்கு பலமுறை வந்து அலைய வேண்டிய நிலை உள்ளது.
இளையான்குடி யூனியனில் உள்ள 55 பஞ்சாயத்திற்கும் இந்த ஒரு இடம் மட்டுமே ஆதார் சென்டராக உள்ளதால் எவ்வித பணியும் நடைபெறாமல் பெரும் இன்னல்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
கூடுதல் மையம்
இதுகுறித்து தாசில்தாரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. மேலும் இளையான்குடியை சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்பகுதியில் கூடுதலாக ஒரு ஆதார் இசேவை மையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் இளையான்குடி பகுதியில் கூடுதலாக ஆதார் இ சேவை மையம் திறக்க வேண்டும். ஏற்கனவே உள்ள இசேவை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.