தென்காசியில் அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

தென்காசி

கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தை கண்டித்தும், இதனை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன், அ.ம.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன், வடக்கு மாவட்ட செயலாளர் வினோத், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

கொடநாடு கொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு கூடியுள்ள தொண்டர்களை பார்க்கும்போது இங்குதான் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கொள்ளை நடக்கிறது. அதைத்தொடர்ந்து கொலைகள் நடக்கின்றன. இந்த சம்பவங்கள் நடக்கும்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அணைக்கப்படுகின்றன. அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? சம்பவம் நடைபெறும்போது மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். இதற்கு விடை தெரியும் வரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின்படி தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெறும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நாங்கள் இல்லாமல் எவரும் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அமைப்பு செயலாளர்கள் செந்தில்குமார், பெத்தநாடார்பட்டி ராதா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் அனிதா செல்வராஜ் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story