அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு


அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Oct 2023 4:00 AM IST (Updated: 21 Oct 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

தேனி அல்லிநகரம் கிழக்கு ரத்தினம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38). இவர் தேனி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளராக உள்ளார். அவர் தேனி பழைய அரசு ஆஸ்பத்திரி சாலையில் இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் கடை வைத்துள்ளார். அவருக்கும் தேனியை சேர்ந்த மூங்கில் ராஜா என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் தனது கடையின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது மூங்கில்ராஜா, வெங்கலாநகரை சேர்ந்த வீரய்யா (25), கண்ணன், கருப்பையா ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரிடம் தகராறு செய்து பீர் பாட்டில், கத்தி, மரக்கட்டை ஆகியவற்றால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மூங்கில்ராஜா உள்பட 4 பேர் மீதும் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். அதுபோல், தன்னை தாக்கியதாக வீரய்யா கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story