நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் தொடங்க கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு


நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் தொடங்க கோரிய வழக்கு தள்ளுபடி -  ஐகோர்ட்டு உத்தரவு
x

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம் தொடங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் அய்யா. இவர், சென்னை ஐகோர்ட்டில், "தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் தனியார் உணவகங்கள் உள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

எனவே, வாகன ஓட்டுனர்கள், பயணிகளுக்கு சுகாதாரமான குறைந்த விலை உணவை வழங்க ஏதுவாக ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா உணவகங்கள் அமைக்க, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமால், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.


Next Story