சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து பூஞ்சோலைக்கு எழுந்தருளிய அம்மன்


சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து பூஞ்சோலைக்கு எழுந்தருளிய அம்மன்
x

அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து பூஞ்சோலைக்கு அம்மன் எழுந்தருளினார்.

திண்டுக்கல்

அகரம் முத்தாலம்மன் கோவில்

வரலாற்று சிறப்புமிக்க தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் மாலையில் கலை நிகழ்ச்சி மற்றும் புராண நாடகங்கள் நடைபெற்றது. மேலும் அந்த நாட்களில் அம்மனின் உற்சவர் மற்றும் பண்டார பெட்டி ஆகியவை கொழுமண்டபத்துக்கு எழுந்தேற்றம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பொதுமக்களால் போற்றப்படுவது அம்மனின் கண் திறப்பு நிகழ்ச்சி ஆகும். சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி, நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் நடந்தது. அதன்பிறகு, ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்து கொலு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்.

திருவிழாவையொட்டி தீச்சட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், கரும்பு தொட்டில் தூக்கி சுமந்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 12 மணி வரை கொலுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன்பிறகு புஷ்ப விமானத்தில் அம்மன் அங்கிருந்து புறப்பட்டு, வானக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தது.

சொருகுபட்டை சப்பரம்

இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி வரை வானக்காட்சி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சொருகு பட்டை சப்பரத்தில் உலா வந்து, பூஞ்சோலைக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூஞ்சோலைக்கு அம்மன் செல்லும் வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பூஞ்சோலைக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஞ்சோலையில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story