ஏழைகளின் பசிப்பிணி போக்கிய அம்மா உணவகத்துக்கு நிதி பசி சேவைகளை மேம்படுத்திட பொதுமக்கள் வலியுறுத்தல்
ஏழைகளின் பசியை போக்கிய அம்மா உணவகத்துக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சேவைகளை மேம்படுத்திட பொதுமக்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.
நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பசியோடு உறங்க செல்ல கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம்.
அம்மா உணவகங்களை போன்று ஆந்திராவில் என்.டி.ஆர். அண்ணா என்கிற பெயரில் உணவகங்கள் முளைத்தன. ஒடிசா, கர்நாடகாவிலும் இதேபோன்ற உணவகங்கள் உருவாகின. மேலும் வேறு சில மாநில அரசுகளும் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளன.
இவ்வாறாக பல மாநிலங்களுக்கு வழிக்காட்டியாக இருந்து காலத்தால் அழியாத திட்டம் என்று போற்றப்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்கிறதோ என்று எண்ண தோன்றும் நிலைக்கு சென்றுவிட்டது.
லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் ஏழை எளியவர்களின் பசிப்பிணி போக்கிய இந்த உணவகம் தான், கொரோனா பெருந்தொற்று முழு ஊரடங்கின் போது, 3 வேளையும் இலவச உணவு வழங்கி, ஒரு ஆலயமாக திகழ்ந்தது.
ஆட்சி மாற்றத்திற்குப் பின், நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகம் மூடப்படும் என்று தகவல் பரவியது. இருப்பினும், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், போதிய நிதி ஒதுக்காத காரணத்தினால், கடலூர் மாவட்டத்தில் எண்ணிலடங்கா ஏழைகளின் பசியாற்றிய அம்மா உணவகங்கள் இன்றைய சூழலில் நிதி பசியால் தள்ளாடும் நிலைக்கு சென்றுவிட்டது. ஏழைகளுக்கு அன்னமிட்டு அவர்களது கோவிலாக இருக்கும் இந்த உணவங்களின் நிதி பசியை போக்கி புத்துயிர் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 இடங்களில் அம்மா உணவகம்
கடலூர் மாவட்டத்தில் தற்போதைய கடலூர் மாநகராட்சி பகுதியில் உழவர் சந்தை, கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி என 2 இடங்களில் கடந்த 24.5.2015-ம் ஆண்டு அம்மா உணவகம் திறக்கப்பட்டது. அதேபோல் நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்திலும், பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி அருகிலும், விருத்தாசலம் பாலக்கரை உழவர் சந்தை அருகிலும், சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் ஆகிய நகராட்சி பகுதியிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது.
அட்சய பாத்திரம்
இந்த அம்மா உணவகம் காலை, மதியம் என 2 வேளை செயல்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை செயல்படும். இங்கு காலை உணவாக இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், பொங்கல் ரூ.5 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்கள், அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். காலை 7 மணிக்கு உணவகம் திறந்ததும் அவர்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற்று உணவை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
ஏழை, எளிய மக்களின் அட்சய பாத்திரமாக இந்த அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவர்களின் பசியை ஆற்றி வருகிறது.
பராமரிப்பு இல்லை
இந்த அம்மா உணவகத்தை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் பராமரித்து வருகிறது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பொறுப்பாளர்களாக இருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 ஊதியமாக வழங்கப்படுகிறது. சில இடங்களில் ரூ.350-ம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.3600 வரை வியாபாரம் செய்து வந்தனர்.
அம்மா உணவக கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி, தள்ளாடி வருகிறது. உணவகத்தில் உள்ள சமையல் கூடங்களும் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. தண்ணீர் குழாய்களும் உடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. கடலூர் அரசு ஆஸ்பத்திரி உணவகத்தில் மேற்கூரை உடைந்து சாப்பிட வரும் பொதுமக்கள் மீது விழும் நிலையில் உள்ளது.
இந்த உணவகங்களுக்கு போதிய பொருட்களும் வழங்காததால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை தான் வியாபாரம் நடக்கிறது. இதனால் அம்மா உணவகத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து விட்டது. ஏனெனில் உணவு சமைத்து வைத்த சில நிமிடங்களிலேயே விற்பனை ஆகி விடுகிறது. தாமதமாக வந்தால் உணவு கிடைப்பதில்லை. இதனால் அம்மா உணவகத்துக்கு ஆட்கள் வருவதில்லை என்ற காரணத்தை கூறி, இந்த திட்டத்தை மூடவும் ஏற்பாடு நடக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகவே போதிய நிதி ஒதுக்கி, பொருட்களையும் வழங்கினால் சிறப்பாக செயல்படும். இதற்கு மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி ஒதுக்க வேண்டும்
இது பற்றி கடலூர் உழவர் சந்தை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்ட மஞ்சக்குப்பத்தை சேர்ந்த புளி வியாபாரி சுப்பிரமணியன் கூறுகையில், நான் ஊர், ஊராக சென்று பூண்டு, புளி வியாபாரம் செய்து வருகிறேன். எங்களை போன்ற சிறு வியாபாரிகளுக்கு இந்த அம்மா உணவகம் மிக சிறந்ததாக உள்ளது. இந்த உணவகத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும். இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றார்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்துக்கு வந்த திட்டக்குடியை சேர்ந்த கிருஷ்ணவேணி கூறுகையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உடல் நிலை சரியில்லாத எனது மகளை சேர்த்து இருக்கிறேன். அப்போது அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் சாப்பாடு கிடைக்கும் என்று வந்தேன். இட்லி வாங்கி சாப்பிட்டேன். நன்றாக இருக்கிறது. ஆனால் உணவகம் சுகாதாரமாக இல்லை. வாசலில் தண்ணீர் ஓடுகிறது. மேற்கூரை உடைந்து இருக்கிறது. இது போன்ற நிலையை சரி செய்ய வேண்டும் என்றார்.
பண்ருட்டி
பண்ருட்டி அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்ட மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த சத்யா, பண்ருட்டியை சேர்ந்த ஜெபக்குமாரி, ஆர்த்தி ஆகியோர் கூறியதாவது:-
நாங்கள் முதன் முதலாக இந்த அம்மா உணவகத்தில் சாப்பிட வந்தோம். மிக குறைந்த கட்டணத்தில் தயிர் சாதம், சாம்பார் சாதம் சாப்பிட்டது எங்களுக்கு போதுமானதாக உள்ளது. மேலும் உணவு ருசியாகவும் உள்ளது. இந்த உணவகத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள் பசியாற சிறந்த திட்டம். இதை மூடி விடக்கூடாது என்றனர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் அம்மா உணவகத்துக்கு வந்த பெரிய சோழவல்லியை சேர்ந்த திருநாவுக்கரசு கூறுகையில், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமாகவும், சுகாதாரமாகவும் உள்ளது. 10 ரூபாய்க்கு சாம்பார் சாதம் மற்றும் காய்கறி பொரியல் வழங்குவது பெரிய விஷயமாகும். மேலும் காலை மற்றும் மதிய வேளையில் கூடுதல் உணவு வகைகள் வழங்கினால் கூட்டம் அதிகமாக வரும். இது மட்டுமின்றி தற்போது வயதானவர்களும், உடல்நிலை முடியாதவர்கள் நின்று கொண்டு சாப்பிட்டு செல்கின்றனர். அவர்கள் அமர்ந்து சாப்பிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் அம்மா உணவகத்துக்கு வந்த ராமலிங்கம்:-
நான் ஆரம்ப காலத்தில் இருந்தே சாப்பிடுகிறேன். அம்மா உணவகத்தில் எந்த குறையும் கிடையாது. 3 வேளையும் உணவு வழங்கினால் நல்லது. இந்த திட்டத்தால் எத்தனையோ ஏழை, எளிய மக்கள் வயிறு நிறைய சாப்பிடுகிறார்கள். இந்த திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சிதம்பரம்
சிதம்பரம் அம்மா உணவகத்துக்கு வந்த ஆறுமுகம்:-
நான் தினந்தோறும் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகிறேன். இட்லி ரூ.1-க்கு வேறு எங்கும் கிடைக்காது. போதிய உணவு பொருட்களை வழங்கி, இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மேலும் அம்மா உணவகத்தில் உள்ளே மேற்கூரைகள் உடைந்தும், மின்விசிறிகள் செயல்படாமல் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்றார்.