ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்களில் 709 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்- ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்களில் 709 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்- ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தகவல்
x

ஈரோடு மாவட்டத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வழியில் 108 ஆம்புலன்ஸ்களில் 709 கர்ப்பிணிகளுக்கு பிரசவமாகி குழந்தைகள் பிறந்து உள்ளதாக ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு


ஈரோடு மாவட்டத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வழியில் 108 ஆம்புலன்ஸ்களில் 709 கர்ப்பிணிகளுக்கு பிரசவமாகி குழந்தைகள் பிறந்து உள்ளதாக ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

108 ஆம்புலன்ஸ் சேவை

தமிழகத்தில் அவசர மருத்துவ சேவைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடல் நலம் பாதிப்பு, மயக்கம் அடைதல், விபத்தில் காயம் ஏற்படுதல், பிரசவ வலி, நெஞ்சுவலி போன்ற அவசர மருத்துவ உதவிக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 46 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவசர அழைப்பு பெறப்பட்ட 8 முதல் 14 நிமிடங்களில் நகர்புறம் மற்றும் கிராம புறங்களுக்கு சேவை அளிக்கப்படுகிறது. இந்த நேரத்தை மேலும் குறைக்கவும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருவதால், அதிக அழைப்புகள் வரும் பகுதி கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகள்

இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 14 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 பேர் 108 ஆம்புலன்சை பயன்படுத்தி உள்ளனர். இதில் 84 ஆயிரத்து 105 கர்ப்பிணிகளும், விபத்தில் சிக்கி காயம் அடைந்த 1 லட்சத்து 992 பேரும் பயன் அடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு சென்ற வழியிலேயே 709 கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் பிறந்து உள்ளது. இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெண்டிலேட்டர், ஈ.சி.ஜி. திரை போன்ற அதிநவீன கருவிகள் உடைய ஆம்புலன்ஸ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

ஈரோடு, கோபி பகுதிகளில் இன்குபேட்டர், வெண்டிலேட்டர் வசதிகளுடன் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் மாதந்தோறும் சுமார் 40 குழந்தைகள் காப்பாற்றப்படுகிறது.

மலைக்கிராமங்கள்

108 ஆம்புலன்ஸ் சேவையை செம்மைபடுத்தும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மலைக்கிராமங்களிலும் 24 மணிநேர சேவை அளிக்கும் வகையில் 9 ஆம்புலன்ஸ்கள் மலைவாழ் மக்களுக்காக இயக்கப்படுகிறது. அங்கு இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்பட்டாலும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வருகிறார்கள்.

சாலை போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடித்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story