அம்பை மன்னார்கோவில் அரசு பள்ளியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு
அம்பை மன்னார்கோவில் அரசு பள்ளியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அம்பை:
அம்பை யூனியன் மன்னார்கோவிலில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 300 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் அங்குள்ள மரத்தடியிலும், சமுதாய நலக்கூடத்திலும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தரக்கோரி கடந்த மாதம் பள்ளி மாணவர்கள் திடீரென அம்பை- தென்காசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அம்பை தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் பள்ளிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அம்பை சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா மன்னார்கோவில் ராஜகோபாலசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின் அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளி முழுவதும் வகுப்பறைகளை சுற்றி பார்த்துவிட்டு அரசு கல்வித்துறை உயரதிகளிடம் தொடர்பு கொண்டு பள்ளியில் புதிய வகுப்பறைகள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதுதொடர்பாக ஏதேனும் நிதி ஒதுக்கீடு இருந்தால் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அம்பை ஒன்றிய செயலாளர் விஜய பாலாஜி, துணைச் செயலாளர் பிராங்க்ளின், அம்பை நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் மாரிமுத்து, மன்னார்கோவில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகவேல், பிரம்மதேசம் ராஜபலவேசமுத்து, வக்கீல் மணி அய்யப்பன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் மின்னல் மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.