அமராவதி கால்வாயில் பெண் பிணம்
அமராவதி கால்வாயில் பெண் பிணம்
மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான கால்வாயில் பெண் பிணம் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரைண நடத்தி வருகிறார்கள்.
பெண் பிணம்
மடத்துக்குளத்தையடுத்த துங்காவி பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில் பாசனத்துக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.கிராமப்புற பொதுமக்களும் குளிக்க, துணி துவைக்க இந்த கால்வாய் நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பிரதான கால்வாயில் நேற்று மாலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அந்த பெண் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. உடனடியாக இதுகுறித்து கணியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலையா?
விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கால்வாயிலிருந்து பிணமாக மீட்கப்பட்டவர் சீலநாயக்கன்பட்டி பகுதியைச்சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மனைவி ஜோதிமணி (வயது 34) என்பது தெரியவந்தது. அத்துடன் ஜோதிமணி நீண்ட நாட்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கணியூர் போலீசார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.