அமைந்தகரையில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தி.மு.க. பிரமுகர் கைது
அமைந்தகரையில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் முத்துசெல்வன் (வயது 40). இவர், அண்ணா நகர் போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். முத்துசெல்வன் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் அரும்பாக்கம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் என்.எஸ்.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது முதியவர் ஒருவர் மதுபோதையில் அறை குறை ஆடையுடன் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்தார். முத்துசெல்வன் அந்த முதியவரை எச்சரித்து போக்குவரத்தை சீரமைத்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர், இதை செய்வதற்கு நீ யார்? என்று கூறி போலீஸ்காரர் முத்துசெல்வனின் கன்னத்தில் 'பளார்' என அறைந்துவிட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்ததில் தப்பி ஓடியது அமைந்தகரையை சேர்ந்த கண்ணன் (44) என்பதும், தி.மு.க. பிரமுகரான அவர் அதேபகுதியில் டாஸ்மாக் கடை அருகில் 'பார்' நடத்தி வருவதும் தெரியவந்தது. தப்பி ஓடிய கண்ணனை கைது செய்த போலீசார், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.