ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூரில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியில் காலை உணவு திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று ஆழ்வார்திருநகரி வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி வட்டாரத்தலைவர் அகஸ்டின் ஞானதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இம்மானுவேல், சுரேஷ் நியூமேன், ஜெபா பாண்டியன், தேவசகாயம், லாரன்ஸ், தாமஸ், இர்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கொண்டு, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும், காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் ஊதியமில்லாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி ஒப்புதல் வழங்கி, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கோஷம் எழுப்பிய ஆசிரியர்கள்
வட்டாரப் பொருளாளர் ஜெயராஜ் நன்றியுரை கூறினார். ஆழ்வார்திருநகரி வட்டாரச் செயலாளர் மகேஷ் துரைசிங் உட்பட 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
திருச்செந்தூர்
இதேபோன்று, திருச்செந்தூர் வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டாரத்தலைவர் ஜார்ஜ்ராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, வட்டார செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராமலெட்சுமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்செந்தூர் வட்டாரத்திலுள்ள தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.