முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரையிலும் விடுதியில் தங்கி படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் அந்தோணி தலைமை தாங்கி, முன்னாள் மாணவர்களை வரவேற்று பேசினார். பள்ளி தாளாளர் கஸ்மீர், விடுதி காப்பாளர் பால் ஆண்ட்ரூஸ், ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விடுதியில் கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்களான அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றை தற்போதும் கடைபிடித்து வருவதாக பெருமிதத்துடன் கூறினர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.
விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நல்லய்யா, சண்முகசுந்தரம், சின்னதங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் பள்ளியில் சந்திப்பது என்று முடிவெடுத்தனர். முன்னதாக, பள்ளி விடுதியில் தங்கி படித்தும், அங்கு பணியாற்றியும் மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.