முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
காவனூர் இந்திரா நர்சரி, தொடக்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
திமிரி ஒன்றியம், காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் 1985-86-ம் ஆண்டு தொடங்கி 5-ம் வகுப்பு வரை படித்து முடித்த பழைய மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளிக் கணக்காளர் எஸ்.லட்சுமி, தலைமை ஆசிரியர் எம்.கோபி, கணினி ஆசிரியர் எம்.சுரேஷ், பழைய மாணவர்கள் சங்க துணைத் தலைவர் எஸ்.குணாநிதி, துணைச் செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, ஜே.கோபிநாத் ஆர்.மாதவன் பி.ராஜசேகர், எஸ்.ஜனார்த்தனன் உள்பட பலர் முன்னிலை வைத்தனர். சங்கத் தலைவர் டாக்டர் பி.ஆனந்தன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஐதராபாத் எக்ஸெல் மருத்துவமனை டாக்டரும், முன்னாள் மாணவர் சங்க செயலாளருமான எம்.பிரபு, திமிரி தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் த.கோ.சதாசிவம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.முனியப்பன் என்ற சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 38 ஆண்டு கல்வி சேவையை பாராட்டி நிர்வாகிக்கு திமிரி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் வாழ்த்து மடல், பழைய மாணவர்கள் சார்பில் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆண்டிற்கு 2 முறை மக்கள் பயன்பெறும் வகையில் பொது மருத்துவ முகாம் பள்ளியில் நடத்த முடிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஆர்.லோகேஷ், எஸ்.வேலன், எஸ்.பிரேமலதா, பி.நளினி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழைய மாணவர் ஜெ.சக்தி நன்றி கூறினார்.