மேலும் 638 பள்ளிகளில் காலை உணவு திட்டம்


மேலும் 638 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 638 பள்ளிகளில் காலை உணவு திட்டம் வருகிற 15-ந் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை பாதுகாக்கும் பொருட்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக கல்வராயன்மலை வட்டாரத்திற்குட்பட்ட 14 அரசு தொடக்கப்பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீதமுள்ள 638 அரசு பள்ளிகளில் இத்திட்டம் வருகிற 25-ந்தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

அதன்படி தியாகதுருகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது (பெண்கள்) தொடக்கப்பள்ளியில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சோதனை முயற்சியாக செய்யப்பட்ட உணவை கலெக்டர் ஷ்ரவன்குமார் சாப்பிட்டு தரமாக உள்ளதா என சரிபார்த்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு உணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சுந்தராஜன், உதவி திட்ட அலுவலர் மாதேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு),சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் சங்கர், தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story