குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்...!
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் இந்த மழை பெய்கிறது. தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஆகியவற்றிலும் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இடையிடையே கனமழையும் பெய்கிறது
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் இந்த தடை நீடித்தது. இதேபோன்று மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதித்தனர். மற்றும் ஐந்தருவி புலி அருவி சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள்.
பழைய குற்றாலம் அருவியில் 3-ஆவது நாளாக இன்று வெள்ளப்பெருக்கு குறையாததால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.