தென்னங்கள் இறக்க அனுமதிக்க வேண்டும்


தென்னங்கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
x

தென்னங்கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கே.வி.குப்பத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். தாசில்தார் டி.கலைவாணி முன்னிலை வகித்தார். தலைமை இடத்து துணை தாசில்தார் வடிவேலு வரவேற்றார். வட்ட வழங்கல் அலுவலர் ஜனனி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

உழவர் சந்தை

வேர்க்கடலை பறிக்கும் எந்திரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவேண்டும். தாமல் ஏரியில் ஒரு மதகு பழுதாகி இருப்பதால் நீர் வீணாகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களை பாதுகாக்க தென்னங்கள் இறக்க அனுமதிக்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்ட கால்நடைகளை மருத்துவமனைக்கு வெகுதூரம் அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இப்பகுதியில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும்.

தரமற்ற தடுப்பணைகள் மழையில் அடித்து செல்லப்பட்டன. சுய உதவிக்குழுக்கள் மூலம் கால்நடைகளுக்கான காப்பீடுகளை வழங்க அரசு வகை செய்ய வேண்டும். சந்தை மேம்பாட்டிற்கு இடம் வழங்க வேண்டும். உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும்.

தென்னங்கள்

கெம்மங்குப்பம், தேவரிஷிகுப்பம் பகுதிகளில் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும். வயல்களில் புகுந்து தொல்லைதரும் குரங்குகளை பிடிக்க வனத் துறையினர் ஏற்பாடு செய்யவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தைக்கொண்டு 3-வது நபர் விவரங்களைக் கேட்க உரிமை இல்லை. விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்கும். இந்த சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.


Next Story