மதுரை ஆதீன மடத்துக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கட்ட 2 வாரம் கெடு


மதுரை ஆதீன மடத்துக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கட்ட 2 வாரம் கெடு
x

மதுரை ஆதீன மடத்துக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கட்ட 2 வாரம் கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை

மதுரை தெற்கு மாசி வீதியில் மதுரை ஆதீன மடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒருபகுதியை குத்தகை இளவரசன் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். அங்கு விடுதி நடத்தி வருகிறார். கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து உரிய வாடகைத்தொகையையும், மின் கட்டணத்தையும் செலுத்தாமல் இருந்தார். எனவே அங்கிருந்து அவரை வெளியேற்றும் நடவடிக்கை சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி இளவரசன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை ஆதீனம் சார்பில் ஆஜரான வக்கீல் அருண் சுவாமிநாதன், மதுரை ஆதீன மடத்தின் 292-வது சந்நிதானமாக இருந்த அருணகிரிநாதர், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளுக்கு முரணாக மனுதாரருக்கு பல ஆண்டுகள் குத்தகைக்கு கட்டிடப்பகுதியை வழங்கினார். விதிகளின்படி 5 ஆண்டுகள் மட்டுமே குத்தகைக்கு வழங்க முடியும்.

இதுபோல விதிகளுக்கு முரணாக பல சொத்துகளை விற்பனை செய்தும், குத்தகைக்கும் விட்டு உள்ளார். தற்போதைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர், அந்த சொத்துகளை எல்லாம் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மனுதாரர் தற்போது வரை ரூ.51 லட்சத்து 93 ஆயிரத்து 798-ஐ வாடகை நிலுவைத்தொகையாக வைத்துள்ளார். இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பின்பற்றாமல் அவமதிக்கிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனுதாரர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கித்தொகையில் ரூ.25 லட்சத்தை 2 வாரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அந்த தொகையை டெபாசிட் செய்ய தவறினால் மனுதாரரை ஆதீனத்தின் சொத்தில் இருந்து வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.


Related Tags :
Next Story