2 மேம்பால பணிகளுக்காக தலா ரூ.18 கோடி ஒதுக்கீடு
மாப்படுகை, நீடூர் பகுதியில் 2 மேம்பால பணிகளுக்காக தலா ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மாப்படுகை, நீடூர் பகுதியில் 2 மேம்பால பணிகளுக்காக தலா ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 160. கி.மீ. மாநில நெடுஞ்சாலை மாவட்ட முக்கிய சாலை 168 கி.மீ., இதர சாலைகள் 421 கி.மீ, தேசிய நெடுஞ்சாலை 46 கி.மீ. என மொத்தம் 855 கி.மீ சாலைகள் தமிழக அரசால் நேரடியாக பராமரிக்கப்படுகிறது. 2021-2022 -ம் நிதியாண்டில் 148 குழாய் பாலங்கள், ஆர்ச் கல்வெட்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டு ரூ.27 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 134 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.18 கோடி...
2021-2022ல் தரை பாலங்களை மேம்பாலமாக மாற்றும் பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் கல்லணை-பூம்புகார் சாலையில் மாப்படுகையிலும், மணல்மேடு சாலையில் நீடூரிலும் ரெயில்வே மேம்பாலப் பணிகளுக்காக தலா ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. மணல்மேடு- முட்டம் இடையே கொள்ளிடம் ஆற்று பாலத்திற்கு அணுகுசாலைக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்றார்.
தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் விபத்தில்லா பஸ் டிரைவருக்கும், பள்ளிக்கல்வித்துறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக பாராட்டு சான்றிதழ், கேடயங்களை அமைச்சர் வழங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை என்ஜினீயர் நெடுஞ்சாலைகள் சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய இயக்குனர் கோதண்டராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் காமாட்சி மூர்த்தி, மகேந்திரன், ஜெயபிரகாஷ், நகரசபை தலைவர்கள் செல்வராஜ், சீர்காழி துர்காபரமேஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணசங்கரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.