மின்பாதையாக மாற்ற ரூ.143 கோடி ஒதுக்கீடு
காரைக்குடி-திருவாரூர் ரெயில்வே வழித்தடத்தை மின்சார ரெயில்வே பாதையாக மாற்றுவதற்கு ரெயில்வே துறை சார்பில் ரூ.143 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
காரைக்குடி
காரைக்குடி-திருவாரூர் ரெயில்வே வழித்தடத்தை மின்சார ரெயில்வே பாதையாக மாற்றுவதற்கு ரெயில்வே துறை சார்பில் ரூ.143 கோடி ஒதுக்கீடு செய்ததற்கு காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மின்சார ரெயில் பாதை
இந்திய ரெயில்வே துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள ரெயில் வழித்தடத்தை மின் வழித்தடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் டீசல் பயன்பாட்டை குறைத்து ரெயில் அதிக வேகத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னக ரெயில்வே துறை சார்பில் ஏற்கனவே காரைக்குடி-மானாமதுரை, காரைக்குடி-திருச்சி வரை உள்ள சாதாரண ரெயில்வே தடத்தை மின்வழித்தடமாக மாற்றப்பட்டு தற்போது இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் காரைக்குடி-திருவாரூர் இடையேயான ரெயில் பாதை மட்டும் டீசல் என்ஜின் கொண்டு இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ரெயில்வே பாதையையும் மின்வழித்தடமாக மாற்றுவதற்காக இந்திய ரெயில்வே துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.143.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் வரவேற்று நன்றியும் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறியதாவது:-
காரைக்குடி-திருவாரூர் இடையே மின்வழித்தடமாக மாற்றுவதற்காக ரெயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது மிகுந்த வரவேற்கத்தக்கதாகும்.
அதிக ரெயில்கள் இயக்க வாய்ப்பு
ஏற்கனவே காரைக்குடி-திருவாரூர் வழியில் தற்போது தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரெயில், செகந்திராபாத்-ராமேசுவரம் விரைவு ரெயில், வேளாங்கண்ணி-எர்ணாகுளம் விரைவு ரெயில், திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரெயில் ஆகிய 4 ரெயில்கள் டீசல் என்ஜின் மூலம் செல்கிறது. இந்நிலையில் இந்த வழித்தடத்தை மின்வழித்தடமாக மாற்றும் பட்சத்தில் கூடுதல் விரைவு ரெயில்களும், திருவாரூர்-காரைக்குடிக்கு மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய ரெயில்களும், காரைக்குடி-சென்னை இடையே இரவு நேர தினசரி ரெயிலும், கோவை, திண்டுக்கல், பழனி, மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வரை புதிய விரைவு ரெயில்களும், புதிதாக தூத்துக்குடி, நாகர்கோவில் செல்வதற்கும் புதிய ரெயில்கள் இயக்க அதிக வாய்ப்புள்ளது.
எனவே இந்திய ரெயில்வே துறை சார்பில் காரைக்குடி-திருவாரூர் இடையேயான ரெயில்வே வழித்தடத்தை மின்வழித்தடமாக மாற்றும் இந்த பணியை உடனடியாக தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.