நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1½ கோடி ஒதுக்கீடு


நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1½ கோடி ஒதுக்கீடு
x

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1½ கோடி ஒதுக்கீடு

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகளில் பணிகள் செய்ய நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதன் தலைவர் கவிதா பாண்டியன் தெரிவித்தார்.

நகர்மன்ற கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் பிரதான்பாபு, நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர். எஸ். பாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில் குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகராட்சி மேலாளர் சிற்றரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-

உஷா(அ.தி.மு.க.): எனது வார்ட்டில் உள்ள உப்பு குளத்தெருவில் குடிநீர் குழாய்க்கு மெயின் லைன் அமைக்க வேண்டும். சிமெண்டு சாலைகளை சரி செய்ய வேண்டும்.

லட்சுமி(இ.கம்யூ): சாலை வசதிகளை சீரமைத்து தர வேண்டும். சிங்களாந்தியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும்.

பாலங்களை சீரமைக்க வேண்டும்

ராமலோகஈஸ்வரி(மா.கம்யூ): சிமெண்டு சாலைகள் மிகவும் பழுதாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். பாலங்களை சீரமைக்க வேண்டும்.

ராஜேந்திரன்(காங்கிரஸ்): எனது வார்ட்டில் உள்ள அழகு நாச்சியார் கோவிலுக்கு நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. உடனடியாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.

எழிலரசன்(காங்கிரஸ்): திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விரைவில் நடக்க இருப்பதால் தேருக்கு அருகில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்.

படித்துறை

துணைத்தலைவர்: சிங்களாந்தியில் குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைத்து தர வேண்டும். சிங்களாந்தில் உள்ள 2 குளங்களுக்கு படித்துறை கட்டித்தரவேண்டும்.

நகராட்சி ஆணையர்(பொறுப்பு): உப்பு குளத்தெருவில் குடிநீர் குழாயில் மெயின் லைன் விரைவில் அமைத்து தரப்படும். சிங்களாந்தி பகுதிக்கு விரைவில் சிமெண்டு சாலை அமைக்கப்படும். நாடார் தெரு பகுதிக்கு அனைத்து சாலைகளும் விரைவில் சரி செய்யப்படும். அழகு நாச்சியார் கோவில் மற்றும் குடோனுக்கு செல்லும் சாலை தார்ச்சாலையாக விரைவில் மாற்றி தரப்படும்.

ரூ.1½ கோடி ஒதுக்கீடு

நகர்மன்ற தலைவர்: திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகளில் பணிகள் செய்ய நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து வார்டுகளுக்கும் பணிகள் பிரித்து செய்யப்படும். ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக வரைவு திட்டம் அனுப்பப்பட்டு நிதி கோரப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் அனைத்து பகுதி சாலைகளும் சரி செய்யப்படும். புதிதாக சாலைகள் அமைக்கப்படும். நகராட்சிக்கு வரும் நிதியிலிருந்து அனைத்து வார்டுகளுக்கும் அனைத்து பணிகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story