சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் அறிவிப்பு


சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

1968-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க 'இருமொழிக் கொள்கை' தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்றில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருவதோடு, பல துறைகளிலும் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்வகையிலும், காலத்துக்கேற்ப தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

தமிழை சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக தயாராகும்வகையில், மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாக தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடப்பட்டு வருகிறது. மாநில மற்றும் மத்திய சட்டங்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் அவற்றின்கீழ் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகளையும் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.

ரூ.3 கோடி ஒதுக்கீடு

சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து அதற்கான முயற்சிகளை எடுத்து வந்தவர் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடிவரும் இந்த தருணத்தில் தமிழை சட்ட ஆட்சிமொழியாக்கும் அவரது கனவை நனவாக்கவும், அனைத்து மக்களுக்கும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் பயன்பாட்டுக்காக கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் பணிக்காக மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்துக்கு முதல்கட்டமாக ரூ.3 கோடியும், பின்னர் தேவைக்கேற்பவும் நிதி ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே என்று பாவேந்தர் காட்டிய வழியில் செம்மொழித் தமிழுக்குச் சட்டத்துறையிலும் உரிய இடத்தைப் பெற்றுத்தருவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story