அல்லிநகரம் மந்தைக்குளத்தில் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விட மக்கள் எதிர்ப்பு
அல்லிநகரம் மந்தைக்குளத்தில் மீன் வளர்ப்பு குத்ததைக்கு ஏலம் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 6 நீர்ப்பாசன கண்மாய்களில் தீவிர உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை திட்டத்தின் கீழ் மீன்வளர்க்கும் குத்தகை உரிமம் மீன்வளத்துறை மூலம் 3 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மீன் வளத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோட்டூர் நாராயணசமுத்திரம் கண்மாய், முத்துத்தேவன்பட்டி கன்னிமார்குளம், கருங்கட்டான்குளம், பெரியகுளம் பெரியகுளம் கண்மாய், லட்சுமிபுரம் கரிசல் குளம், தேனி அல்லிநகரம் மந்தைக்குளம் ஆகிய இடங்களில் மீன் வளர்ப்பு குத்தகை உரிமம் ஏலம் விடப்பட உள்ளது.
இந்நிலையில், தேனி அல்லிநகரம் மந்தைக்குளம் கண்மாயில் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விட விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நீர்வள பாதுகாப்பு சங்க தலைவர் ராஜகுருபாண்டியன், செயலாளர் ரெங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அதில், "தேனி அல்லிநகரம் மந்தைக்குளம் கண்மாயில் 15 ஆண்டுகளாக மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்மாயின் தூய்மை நிலையை கருதியும், மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கண்மாயில் மீன் வளர்ப்பு குத்தகை உரிமம் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.