'பா.ஜ.க.வுடன் கூட்டணி... இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை' - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


பா.ஜ.க.வுடன் கூட்டணி... இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 18 Feb 2024 5:18 PM IST (Updated: 18 Feb 2024 5:20 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வுடன் இனி ஒட்டுமில்லை, உறவுமில்லை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை இந்த கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. இதனிடையே அ.தி.மு.க. தலைவர்கள் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய சில கருத்துகள் அ.தி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்தது. இந்த கூட்டணி முறிவை அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதனிடையே 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இதனை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை. கதவை மூடிவிட்டோம், இனி பா.ஜ.க.வுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை. எங்கள் நிலைப்பாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தெளிவுபடுத்தியுள்ளார்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story