14 மக்களவைத் தொகுதிகள் தருவோருடன் கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
பிப்.12-ம் தேதிக்குள் தே.மு.தி.க.,வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பின் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தே.மு.தி.க. வளர்ச்சி, தேர்தல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து இனிமேல்தான் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். 4 மண்டலங்களிலும் தே.மு.தி.க. சார்பில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
எந்த கூட்டணியும் இதுவரை தேர்தல் கூட்டணி முடிவை எடுக்கவில்லை. இதுவரை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 14 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தருவோருடன் கூட்டணி. நாங்கள் கேட்கும் இடங்களை தரும் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். 2014 மக்களவைத் தேர்தல்போல் தொகுதிகளை பங்கீடு செய்யும் கட்சிகளுடன் கூட்டணி. வரும் 12-ம் தேதி கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
கொள்கை, சித்தாந்தங்கள் பற்றி தே.மு.தி.க.விடம் கேட்க வேண்டாம்.விஜயகாந்த் அளவுக்கு இதுவரை எந்த கட்சிகளும் தங்களது கொள்கைகளை அறிவிக்கவில்லை. தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தே.மு.தி.க. சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.