வழக்குப்பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக புகார்:தனிப்படை போலீசார் 14 பேர் பணி இடமாற்றம்- தென் மண்டல ஐ.ஜி. நடவடிக்கை


வழக்குப்பதியாமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக புகார்:தனிப்படை போலீசார் 14 பேர் பணி இடமாற்றம்- தென் மண்டல ஐ.ஜி. நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2023 3:00 AM IST (Updated: 27 Jun 2023 3:15 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருள் தொடர்பான வழக்குகள் பதியாமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தனிப்படையை சேர்ந்த 14 போலீசார் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மதுரை


புகையிலை பொருள் தொடர்பான வழக்குகள் பதியாமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தனிப்படையை சேர்ந்த 14 போலீசார் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தனிப்படை போலீசார்

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் குட்கா போதைப்பொருள் தொடர்பாக அதிரடி ஆய்வு நடத்தி வழக்குப்பதிவு செய்ய, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் பணியில் இருக்கின்றனர்.

லஞ்சம் வாங்கியதாக புகார்

இந்தநிலையில் அந்த தனிப்படை போலீசார், போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்குகள் பதியாமல் இருப்பதற்கு லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தது. இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்கிற்கும் தகவல் தெரிவித்தார்.

தனிப்படை போலீசார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், தனிப்படையை சேர்ந்த 14 போலீசார், வழக்குப்பதியாமல் இருக்க பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர்கள் 14 பேரையும் மதுரையை தவிர்த்துள்ள தென் மாவட்டங்களுக்கு அதிரடியாக பணியிட மாறுதல் செய்து ஐ.ஜி. உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் கஞ்சா வியாபாரிகளிடம் வழக்குப்பதியாமல் இருக்க லஞ்சம் பெற்றதால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தனிப்படை போலீசார் பணியிட மாறுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுரை மாவட்ட காவல்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Related Tags :
Next Story