கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்
கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்
கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் பேசினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கனியமுதா ரவி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் லெனின் வரவேற்றார். இதில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு;-
பழனிவேலு (தி.மு.க.): முத்துப்பேட்டையை தனித்தாலுக்காவாக அறிவித்ததற்கும், முனங்காட்டில் ரூ.10 கோடியில் மீன் பிடி துறைமுகம் அமைத்ததற்கும், இடும்பாவனத்தில் புறக்காவல் நிலைய அமைத்ததற்கும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்கள், ஆறுகள் ஆகியவைகளில் படர்ந்து கிடக்கும் வெங்காயத்தாமரை செடிகளை தண்ணீர் திறப்பதற்கு முன்பு அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழவாடியகாடு சாலை, மேலவாடியகாடு சாலை, காடுவெட்டி பகுதியில் உள்ள சாலைகளான மேற்கு மயான சாலை, கற்பகநாதர்குளம் சாலை ஆகியவைகளை உடனே சீரமைத்து தர வேண்டும்.
சாலைகளை சீரமைத்து தர வேண்டும்
தேவகி (தி.மு.க.): சோத்திரியம் சாலை, சிவராமன் நகர் சாலை, குறுக்கு வெளி கோட்டகம் புதிய கிளை தாங்கியாறு சாலை, எடையூர் மருத்துவமனை சாலை, குமாரபுரம் சாலை ஆகியவைகளை சீரமைத்து தரவேண்டும். எடையூர் சம்பு அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும்.
ராஜா (பா.ம.க.) : ஓவரூரில் சேதமான வெள்ளகுளம் சுடுகாடு சாலை, கோவில் தெரு சாலை, திருவாசகுளம் சாலை, அப்பகுதி சுடுகாடு சாலை, கீழகோட்டகம் சாலை, தெற்குதெரு சுடுகாடு சாலை, மருதவனம் - மாங்குடி இணைப்பு சாலை ஆகியவற்றை சீரமைத்து தர வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடு
மோகன் (தி.மு.க.): வல்லம்பகாடு, சிறுபட்டாக்கரை ஆகிய பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனே சரி செய்து தர வேண்டும். வல்லம்பகாடு சாலை, சிறுபட்டாக்கரை இணைப்பு சாலை மற்றும் உள்புறம் உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும், ஆலங்காடு ஈ.சி.ஆர். சாலை ரவுண்டனாவிலிருந்து முத்துப்பேட்டை நகர் பகுதிக்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
ராதா (தி.மு.க.): வீரன்வயல் சாலையை சீரமைத்து தர வேண்டும். அந்்த பகுதிக்கு புதிய பாலம் கட்டித்தர வேண்டும். .
ஜாம்பை கல்யாணம் (தி.மு.க.) : ஜாம்புவானோடை தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தரம் உயர்த்தி தர வேண்டும், வடகாடு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும். வடக்கு வெள்ளாதி காடு சாலை சீரமைத்து தர வேண்டும்.
நிறைவேற்றப்படும்
ஒன்றியக்குழு தலைவர்: கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்
இவ்வாறு விவாதம் நடந்தது.