அனைத்து டெண்டர்களும் வெளிப்படையாக தான் விடப்படுகிறது
அனைத்து டெண்டர்களும் வெளிப்படையாக தான் விடப்படுகிறது
வெளிப்பாளையம்:
நாகை நகராட்சியில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படையாக தான் விடப்படுகிறது என நகர்மன்ற தலைவர் மாரிமுத்து கூறினார்.
மாதாந்திர கூட்டம்
நாகை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆணையர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினர்.
இதன் விவரம் வருமாறு:-
செந்தில்குமார் (துணைத்தலைவர்): நாகூரில் யாத்திரிகளின் நலன் கருதி ரூ.37 லட்சத்தில் கழிவறை கட்ட நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாகை நகர பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.8½ கோடியில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனவே இனி வரும் காலங்களில் நாகை நகர பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்காது.
வெளிப்படையாக டெண்டர்கள்
பரணிகுமார் (அ.தி.மு.க): நாகையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்களில் நாளுக்கு நாள் தீப்பிடித்து எரிவது அதிகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். இதை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக நாகை நகராட்சி மீது பொதுமக்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தால் என்ன செய்ய முடியும்.
நகராட்சி சார்பில் டெண்டர் விடுவது சம்பந்தமாக முன்கூட்டியே எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது கிடையாது. முன்கூட்டியே நோட்டீஸ் வந்தால்தான் அதற்கு ஆட்சேபனை போன்ற கருத்துக்கள் தெரிவிக்க முடியும்.
தலைவர்: நகராட்சியில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படையாக தான் விடப்படுகிறது. கடந்த ஆட்சி காலங்களில் டெண்டர் விடுவது யாருக்குமே தெரியாது.
தீர்வு காணவே கூட்டம்
மணிகண்டன் (அ.தி.மு.க): கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட தவறுகள் போல் இந்த ஆட்சி காலத்தில் நடக்க வேண்டாம் என விரும்புகிறோம்.
சுரேஷ் (தி.மு.க): நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குறைகளை மன்றத்தில் தெரிவித்து தீர்வு காணவே கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் பசுமை தீர்ப்பாயத்திற்கு சென்று நகர்மன்றம் மீது வழக்கு தொடரப்படும் என்று கூறுவது ஏதோ மிரட்டுவது போல் உள்ளது.
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பரணிகுமார், மணிகண்டன் ஆகியோர் குறுக்கிட்டு மக்கள்தான் வழக்கு தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டதே தவிர, அ.தி.மு.க. கவுன்சிலர் வழக்கு தொடரப்போவதாக தெரிவிக்கவில்லை. தி.மு.க கவுன்சிலர் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார். உறுப்பினர்கள் கேள்விக்கு தலைவர் மற்றும் ஆணையர் தான் பதில் சொல்ல வேண்டும்.
வாக்குவாதம்
இதனால் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தலைவர் மாரிமுத்து தலையிட்டு கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார்.
சித்ரா (தி.மு.க): நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்காக பதிவு செய்யாதவர்களுக்கு என்.ஏ.சி. சான்றிதழ் நகராட்சி மூலம் வழங்கப்படுவது முற்றிலும் மறுக்கப்படுகிறது. இந்த சான்றிதழ் கொடுத்தால் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுபஸ்ரீ (ம.தி.மு.க): வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் சாலையை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
சத்தியவாணி (தி.மு.க) : குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதை சரி செய்ய வேண்டும். நாணயக்கார தெருவில் சாலை வசதி அமைக்க வேண்டும்.
குப்பை தொட்டி அமைக்க வேண்டும்
ஜோதிலட்சுமிகுணாநிதி (இ.கம்யூ): நாகை நகர எல்லையில் எல்லா வார்டுகளிலும் குப்பை அதிக அளவில் தேங்குகிறது. எனவே குப்பைகள் கொட்ட குப்பைதொட்டி அமைக்க வேண்டும்.
ஆணையர்: குப்பைதொட்டி வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக குப்பைகள் பிரித்து வாங்க வாகனங்கள் வீடுதோறும் வருகிறது. இதை பொதுமக்களிடம் உறுப்பினர்கள் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.