அனைத்து வரி இனங்களையும் முறைப்படுத்தி வசூலிக்க வேண்டும்
மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு நிதி அவசியம் என்பதால் அனைத்து வரி இனங்களையும் முறைப்படுத்தி வசூலிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு மேயர் ராமச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
சேலம் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடக்கிறது. அதேபோன்று 'நமக்கு நாமே' திட்டப்பணிகள், சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெறுகிறது.
இந்த பணிகள் எந்த அளவு முடிவுற்று உள்ளது. முடிவுறாமல் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
அப்போது அவர் பேசுகையில், மாநகராட்சியின் வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு நிதி மிக அவசியம். எனவே தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி, காலிமனைகள் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் முறைப்படுத்தி அதிகாரிகள், ஊழியர்கள் வரி வசூல் செய்ய வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், அனைத்து வார்டுகளிலும் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு எவ்வித தொய்வும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், மாநகர நல அலுவலர் யோகானந், செயற்பொறியாளர்கள்.பழனிசாமி, ராஜேந்திரன், நிலைக்குழுத் தலைவர்கள் சாந்தமூர்த்தி, குமரவேல், ஜெயகுமார், முருகன், சரவணன், தமிழரசன், மஞ்சுளா மற்றும் செயற்பொறியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.