பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயாராக உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

பருவமழை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மழையால் மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 8, அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 39, மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் 42, ஆக மொத்தம் 133 பகுதிகள் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு மேற்கண்ட பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 480 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 தன்னார்வலர்களுக்கு ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

புயல் பாதுகாப்பு மையங்கள்

பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர்-1, மற்றும் எளாவூர் -2 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.

கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்க 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல் நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை வாயிலாக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளது.

தொடர்புக்கு

மாவட்டத்தில் 63 ஆயிரத்து 480 மணல் மூட்டைகள், 5 ஆயிரத்து 110 சவுக்கு மரக்கம்பங்கள் தயாராக உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 355.67 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறு பாலங்கள் 3,070 மற்றும் பாலங்கள் 56 சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்:1077, 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது. மேலும் கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் வாட்ஸ் ஆப் எண்: 9444317862 ஆகிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story