திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 22 Dec 2023 6:53 PM IST (Updated: 22 Dec 2023 7:26 PM IST)
t-max-icont-min-icon

எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கிறிஸ்துமஸ் விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடத்துகிறார். கிறிஸ்துமஸ் விழாவை இந்து சமய அறநிலையத்துறை நடத்துவதுதான் திராவிட மாடல். மத நல்லிணக்கமே திராவிட மாடலின் அடையாளம்.

திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். மக்களின் ஒற்றுமையை பிரிக்க ஒரு கூட்டம் நினைக்கிறது. அனைத்து மதமும் அன்பையே போதிகின்றன; எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை. மனிதர்கள் அனைவரும் சமம்தான் என்பது சமத்துவம். பல்வேறு மதங்களை பின்பற்றி ஒற்றுமையாக வாழும் நாடு இந்தியா. வகுப்புவாத சக்திகளால் தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது. மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான அக்கறையுடன் உதவிகளை வழங்கினோம். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 98% நிவாரண நிதி வழங்கியுள்ளோம். தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளோம். சிறுபான்மை மக்கள் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என கபட நாடகம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி; அவரின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

மத்திய அரசு நிதி தராத சூழ்நிலையிலும், மாநில அரசு உடனடியாக நிதியை விடுவித்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story