அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும் தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் எங்கும் ஏழை எளிய பொதுமக்கள் தங்களுடைய நோய்களுக்கான மருத்துவத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொள்கிறார்கள்.
நீரழிவு நோய், இதயநோய், ரத்தஅழுத்தம் போன்றவற்றிற்கு ஏழை, எளிய மக்கள் பெரிதும் அரசு மருத்துவமனைகளையே நாடுகின்றனர். தனியார் மருத்துவனைகளில் இவ்வகை நோய்களுக்கான மருத்துவ கட்டணங்களும், மருந்து மாத்திரைகளும் விலை அதிகம். பொருளாதார ரீதியாக சிரமப்படும் ஏழை, எளிய மக்களால் அவற்றை வாங்க இயலாது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளை நாடும் இவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் பல்வேறு மருந்துகள் மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில், மருந்தாளுனர்கள் நீங்கள் வேண்டுமென்றால் வெளியில் வாங்கிகொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.
அவ்வகை மருந்தின் விலை தனியார் மருந்தகங்களில் மிக அதிகமாக இருக்கிறது. அவற்றை பொது மக்களால் வாங்க இயலாமல் நோயுடன் போராடும் அவல நிலைதான் ஏற்படுகிறது. இலவசமாக மருத்துவம் பார்த்துகொள்ள வாய்பிருந்தும் அதனால் பயனில்லாமல் போவது கொடுமையிலும், கொடுமை.
எனவே, அரசு மருத்துவனைகளில் அனைத்து மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும், தங்குதடையின்றி கிடைக்க தமிழக அரசு, வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.