பருவமழை தொடங்கும் முன் அனைத்து ஏரி, குளங்களையும் தூர் வார வேண்டும்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பருவமழை தொடங்கும் முன் அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், தோட்டக்கலை துணை இயக்குனர் சசிகலா, மேலாண்மை இயக்குனர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் கோரிக்கை
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் உளுந்து பயிரிடுவதற்கு வானிலை முன்னரிவிப்பு தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். விளைநிலங்கள் வழியாக தாழ்வு நிலையில் செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் கல்வராயன்மலையில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும். அமெரிக்கன் நோய் தாக்குதலால் மக்காசோளப் பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர் வாரிட வேண்டும். வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாரி அம்மன் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகையை பெற்று தரவேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் புதிய நெல் ரகங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மனுக்கள் மீது நடவடிக்கை
அதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் பதிலளித்து பேசியதாவது:- நீங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகள் மீது தொடர்புடைய துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவசாய சங்க கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு நடவடிக்கை குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்திட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.