ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாததற்கு காரணம் என்ன? நிபுணர்கள் ஆய்வு அறிக்கை


ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பாததற்கு காரணம் என்ன? நிபுணர்கள் ஆய்வு அறிக்கை
x

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.

சென்னை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. மழைக்காலத்தில் படுகையில் இருந்து வினாடிக்கு 2,000 லிட்டருக்கு மேல் பல மாதங்களாக கிணற்றுக்குள் தண்ணீர் சென்றது. ஆனால் கிணறு நிரம்ப வில்லை இந்த கிணற்றில் உள்வாங்கும் தண்ணீரின் மூலம் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்ய நெல்லை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில் சென்னை ஐஐடி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையிலான குழுவினர் அதிசயக் கிணற்றையும் அருகில் உள்ள கிணறுகளையும் பார்வையிட்டு மூன்று முறை ஆய்வுகள் செய்து அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் அதிவேகம் மறுவூட்டல் தொழில்நுட்பம் ஒன்றை செயல்படுத்தலாம் என்று பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஐஐடி குழுவினர் ஆய்வறிக்கை அனுப்பி இருந்தனர். மேலும், அந்தப் பகுதியில் பல வளங்களை உருவாக்க முடியும் என்றும் அதில் தெரிவித்திருந்தனர்.

வெள்ளம் மற்றும் வறட்சியின் தீவிரத்தை குறைக்க முடியும் தண்ணீர் ஆவியாதல் பாதிப்பு இன்றி நீரை பூமிக்கு அடியில் கீழ் நில அணையை உருவாக்கி சேகரிக்க முடியும். இந்த பகுதி முழுவதும் சமமாகவும் தானியங்கி அடிப்படையிலும் நீரை விநியோகிக்கலாம். முறைப்படி பராமரிக்கும் பட்சத்தில் வடிகட்டப்பட்ட தூய்மையான நீர் உள் செலுத்தலாம். கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுத்து பின்னோக்கி செலுத்த வைக்க முடியும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நான்காவது முறையாக சென்னை ஐஐடி குழுவினர் தொடர்ந்து அதிசய கிணறு மற்றும் சுற்றியுள்ள கிணறுகளை கிணறுகள் அமைந்துள்ள தோட்டத்தின் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் ஆய்வு செய்தனர்.தற்போது நடைபெற்ற ஆய்வில் தீயணைப்புதுறை வீரர்களை கயிறுகள் மூலம் கிணற்றுக்குள் இறக்கி நீண்ட குச்சியின் முனையில் நுண்துளை கேமரா மற்றும் பல்புகள் பொருத்தி கிணற்றுக்குள் உள்ள துளைகளை ஆய்வு செய்தனர்.

மேலும், நீர் இறைக்கும் வாளி மூலம் நீரில் மூழ்கும் டிரோன் கேமராக்களை கிணற்றுக்குள் இறக்கி நீரில் சுழல விட்டு கிணற்றின் உட்புறம் உள்ள தீயணைப்பு துறை வீரரின் உதவியுடன் கிணற்றின் உட்பகுதியில் எந்தெந்த பகுதியில் துளைகள் உள்ளது என்பதை கேட்டறிந்து கிணற்றின் வெளியே நின்ற ஐஐடி பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் வைஃபை இணைப்பு மூலம் கையடக்க கணினி உதவியுடன் நீரில் மிதக்கும் டிரோன் கேமராவை இயக்கி நீரை உள்வாங்கும் துளைகளை ஆய்வு செய்தார். ஆயன்குளத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு கிணறுகளில் நான்காம் கட்ட ஆய்வு நடைபெற்றது.

கடந்த 3 மாதங்களாக சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமணன் தலைமையிலான குழுவினர் அதிசய கிணற்றையும், அருகில் உள்ள மற்ற கிணறுகளின் நீரின் தன்மை பற்றியும் நவீன கருவி மூலம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் குழுவினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் டிரோன் கேமரா மற்றும் கோப்ரா (பாம்பு) கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.

பின்னர் கணினி மூலம் பேராசிரியர்கள் குழுவினர் விளக்கி கூறினர். இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,

'இந்த பகுதியில் கால மழை சரியாக பெய்யாததால் கடல்நீர் உள்வாங்கியுள்ளது. அதை தடுக்கும் தொடக்க பணிதான் இந்த ஆய்வு பணி. இந்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு கடல்நீர் உட்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதுகுறித்து ஐ.ஐ.டி. பேராசிரியர் வெங்கட்ரமணன் கூறுகையில்,

'இந்த அதிசய கிணறு உள்ள பகுதிகளில் 300 கிணறுகளுக்கு மேல் நவீன கருவிகள் மூலம் அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுண்ணாம்பு பாறைகள் உள்ளன. மேலும், பாதாள நீரோடைகள் உள்ளதால் இதுவரை அதிசய கிணறு நிரம்பவில்லை. எனினும் கிணற்றில் இந்த ஆண்டு சென்ற மழைநீரால் 6 கி.மீ. தூரம் வரை நீர்மட்டம் நிரம்பியுள்ளது. இது சிறிய அளவிலான ஆய்வுதான்.

கருமேனியாறு நீர்வழிபாதை அருகில் இந்த பணியை விரிவுபடுத்த உள்ளோம்' என்றார். ஆய்வின்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், முதுமொத்தன்மொழி பஞ்சாயத்து தலைவர் ஆனந்தகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story