அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர்சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்:கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் அவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டரை தூக்கி வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த சிலிண்டரை சாலையில் வைத்துவிட்டு, மத்திய அரசை கண்டித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிற்பதாக கூறி அவர்களிடம் இருந்து சிலிண்டரை போலீசார் பறித்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாரிடம் இருந்து மீண்டும் சிலிண்டரை வாங்கி வந்து, அதற்கு மாலை அணிவித்தனர். சமையல் கியாஸ் சிலிண்டர் விலை பல மடங்கு உயர்த்துள்ளதாகவும், விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சிலிண்டருக்கு மாலை
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட இணைச்செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, இந்திய தேசிய மகளிர் சம்மேளனம் சார்பில், சிலர் சிலிண்டர் மற்றும் மண்பானையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவி அழகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அவர்கள் தங்களுக்கு முன்பு சிலிண்டர், கற்களை அடுக்கி அதில் மண்பானையை வைத்தும் மத்திய அரசுக்கு எதிராகவும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.