கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்


கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
x

கோப்புப்படம் 

கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை,

கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். தண்ணீரின் தேவை அதிகம், கிடைப்பதும் குறைவு என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், தென்மேற்கு பருவமழை காலத்திலும் முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே அணைகளில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழல் உள்ளது என்று கூறினார்.

மேலும், குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து தடைகள் இன்றி பராமரித்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


Next Story